பணம் பணமறிய அவா!

கொடுவாயூர்: ஜாஃபர் சாதிக், பாகவி

அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

அடி வயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறித்தெறிந்து வீசிய
ஜீவனுள்ள மாமிசத்
துண்டுகள் நாம்!

கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!

மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!

ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

நமக்கு மட்டும் ஏன்
பணம் பந்த பாசங்களின்
சமாதியாகி விட்டது!

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்று விடுகிறது
நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்...

உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்க்கை?

கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்...

நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது...

தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...

மனைவியின் மூச்சுக்காற்று தந்த சுகம் கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!

குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...

வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?..

உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி

ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...

காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மைக் கட்டிப் போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக...

வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும் விரகத்தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...

என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை யார் அறிவார்?

 

கண்ணீரில் மூழ்கிய தாமரைகள்!

நீதி மன்றம் நிசப்தம் சுவாசித்தது
குற்றக் கூண்டில் நிற்கும்
இவளோ..
வறுமைப் புயலில் சருகாய் உதிர்ந்தவள்
இவள் மீது..
சுமத்தப்பட்டகுற்றச் சிலுவையோ
கேட்பவர் இதயத் துடிப்பை
சில வினாடி
கேட்காமல் செய்துவிடும்.

தான் பெற்றத்
தளிர்கள் ஐந்தைத்
தானே கொன்றாளாம்
அதுவும் தண்ணீரில்

அரசு வக்கீல்
வாதத் திறமைக்கோ
அவசியம் ஏற்படவில்ல
இதோ..
கசப்பான வாழ்வைக்
கண்ணீரில் பிழிகிறாள்
கேளுங்கள்..
''வறுமை நெருப்பின்
வாதை தாளாமல்
அறும்புகள் ஐந்தையும்
நான் தான்
மரணப்பள்ளத்தின்
மடியில் விதைத்தேன்..ஐயா"

நீதிபதியோ
நெகிழும் நெஞ்சினர்
இரங்கத்தக்க இவளா
இரக்கமின்றிகொலை
செய்தாள்..
அந்த ஏழ்மையின்
வார் படத்தை
ஈரமாய் பார்த்து
இதயத்தால் கேட்டார்..

''கொன்றதுதான் கொன்றாயே
இப்படிக்
கொடூரமாகவா..
அந்தத் தாமரை மொக்குகளை
தண்ணீரில் மூழ்கடிப்பது

ஒன்றோ இரண்டோ
ரூபாய் கொடுத்தால்
எளிமையாய்க் கொல்ல
எத்தனையோ மருந்துண்டே..
மூட்டைப்பூச்சி மருந்தே போதுமே
மூச்சு யாத்திரைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
இப்படியா..
மூழ்கடித்து நீரில்
மூர்க்கமாய் கொல்வது''..?

குனிந்த இவள் நிமிர்ந்தாள்
ஏறிட்டக் கண்களில்
நீரிட்ட ஈரம்
இதழ்களின் வரட்சியில்
இகழ்ச்சியின் சாரம்

''அந்த ஒன்றோ இரண்டோ
இருந்திருந்தால்
நான்..
குழந்தைகளைக்
கொன்றேயிருக்க மாட்டேனே ஐயா''!
நீதிபதியோ
நிலை குலைந்து போனார்
நீதி மன்றமோ
மீண்டும் நிசப்தம் சுவாசித்தது!

(எழுதியவர் யாரோ!)